Monday, November 9, 2009

கவிதையும் தோசையும் !!!!!!!!

ஒரு காலத்திலை நான் கவிஞனாக விரும்பினனான் ...
உங்கட நல்ல காலம் அது என்ர விருப்பத்தோடை மட்டும் போச்சு இல்லையெண்டால் என்ர கடிக்கவிதைகளையும் கவிதை எண்ட பேரிலை எழுதிற குப்பைகளையும்
வாசிச்சு நீங்கள் அழவேண்டி இருந்திருக்கும் ...

நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது எனது தமிழ் ஆசான் ச வே ..
அப்போ சொல்லவேணுமா எனது கவிதை வெறியை ...
ஆனால் அப்போதெல்லாம் கவிதையை சிறிது ரசிக்கும் குணம் இருந்தது .
இதிலை "எவனொருவன் கவிதையை ரசிக்கின்றானோ அவனே மிகச்சிறந்த கவிஞனாவான் " இது எனக்கு நானே சொல்லிக்கொண்ட ஒரு தத்துவம்


இப்படியாக் வளர்ந்த எனது கவி ஆசை ஒரு கட்டத்தில் மலர்ந்து மணம் வீசதொடங்கியது.
எனது ஆசை மலர்ந்த தருணம் ஈழத்தமிழரின் மற்றுமொரு இருண்ட காலம்.
இது நடக்கும்போது நான் 10 ஆம் வகுப்பில் இருக்கிறேன் அப்ப ஜோசிச்சு பாருங்கோ இந்த மலர் 3 வருஷம் மொட்டாகவே இருந்தது..

யாழ்ப்பாணத்திலை இருந்து வடமராச்சிக்கு இடம்பெயர்ந்து ஏதிலிகளாக இருந்த நேரம்.
அந்த நேரத்திலை எல்லாரும் தாச்சி கிட்டிப்புள் எண்டு விளையாட நான் மட்டும் தனிய இருந்து நாடு நிலமையப்பற்றி ஜோசிக்கிறனான்.
இந்த பரதேசி, ஒரு சோம்பேறிப்பரதேசி அதால விளையாட போறேல்லை ஆனால் நாட்டு நிலைமையை ஜோசிச்சதெண்டு கதை விடுது எண்டு நீங்கள் ஜோசிக்காக்கூடாது
அப்பாவும் எங்கட வீட்டுக்காரர் என்னை விடேல்லை .. படி படி எண்டு ஒரே கரைச்சல்.
அதாலை நான் ஒரு கொப்பியை தூக்கி கொண்டு படிக்கிற மாதிரி ஒவ்வொரு நாளும் நடிக்க தொடங்கினன்.
இந்த நாடு நடப்புக்களை எல்லாம் என்ற கவிதையால் தீர்த்து விடலாம் எண்டொரு நினைப்பிலை , என்ற கவிதைக்காவியத்தை எழுதத்தொடங்கினேன்

இப்ப அந்த புகழ் பெற்ற காவியத்திலிருந்து சில வரிகள் .......

கார்காலமாய் போர்க்கால மேகம் சூழ்ந்திருக்க.
நீர் கோலமாய் நினைவுகள் கலைய..
என்றவாறு எனது கவிதை தொடர்ந்து சென்றது..

( அந்த முழுக்கவிதையையும் இஞ்ச நான் எழுதினால் நீங்கள் goole இற்கு அறிவிச்சு இந்தப்பதிவையே நிறுத்தக்கூடும் .. அதனால இவ்வளவும் காணும்..)

இந்த காவியம் இப்ப முக்கியமில்லை இதுக்கு வந்த பின்னூட்டந்தான் எனக்கு முக்கியம்

அடுத்த நாள் காலமை நான் போயப்பார்த்தன் ...
எனது கவிதைக்கு நிறைய பின்னுட்டங்கள் வந்திருந்திச்சு .. அதயும் பாருங்கோ..

ஏண்டா இவ்வளவு காலமும் நல்லாதானே இருந்தனி இண்டைக்கு உனக்கு என்ன நடந்தது..
- இது என்ற தம்பி

இதுக்குதான் சொல்லுறனான் தனியத்தனிய இருந்து ஜோசிக்கதை எண்டு.. பாத்தியே இப்ப இப்பிடியாப்போச்சு. ( ஏதோ எனக்கு விசர் முத்திப்போச்செண்ட மாதிரி ஒரு பின்னூட்டம் )
- இது என்ற அக்கா

இதுக்குள்ள ஒரு வஞ்சப்புகழ்ச்சி ... கவிஞரே வாருங்கள் வந்து உங்கள் கவிதை மழையை தாருங்கள்.. - யாரோ..

என்னாலை என்ற உள்வீட்டு குத்துகளை தாங்கேலாமல் போட்டுது. அதாலை கொஞ்சநாள் மூஞ்சிய நீட்டிக்கொண்டு திரிஞ்சன் ..
ஆனால் அம்மா நினைச்சா , பெடியனுக்கு பிடிச்ச தோசை கன காலமாய் சுடேல்லை அதுதான் இப்பிடி மூஞ்சிய நீட்டிக்கொண்டு திரியிறான் எண்டு ..
பிறகென்ன ஒரு தோசையை சுட்டுத்தந்து போட்டு அம்மா சொன்னா " சரி சரி இனி மூஞ்சியை நீட்டாமல் இரு பாப்பம் " ...

ஆனால் இது வரைக்கும் கவிதைக்கும் தோசைக்கும் என்ன சம்பந்தமெண்டு எனக்கு தெரியேல்லை ..

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருந்தாலும் நான் இப்ப ரசிச்ச கவிதை ஒண்டு.(சத்தியமாய் நான் எழுதலைங்கோ )

அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது நம் தவறல்ல.